டெல்லி: ஐசிசி நடத்தும் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க - இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம் அந்த அணி பல சாதனைகளை படைத்து உள்ளது. இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை என்றாலும், அவர்களின் சாதனைகள் ஏராளம்.
ஒருநாள் உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் :இந்த ஆண்டு உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் போட்டியாக இலங்கை அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 428 ரன்கள் குவித்தது. இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இந்த வரிசையில் முன்னணியில் இருந்தது.
ஒருநாள் உலக கோப்பையில் அதிக முறை 400 ரன்கள் : இலங்கைக்கு எதிராக 428 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிக முறை உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 400 ரன்களுக்கு மேல் தாண்டிய அணி என்ற பெருமையை தென் ஆப்பிரிக்கா பெற்று உள்ளது. இதுவரை 3 முறை 400 ரன்களை கடந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதற்கு முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.