சென்னை: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் இடையேயான லீக் ஆட்டம் நேற்று (அக். 27) சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டி இறுது வரை த்ரில்லாகவே சென்றது. கடைசியில் தென் ஆப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் முக்கியமான நேரத்தில் நடுவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தீர்ப்பளித்ததாக இணையத்தில் பலர் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அப்படி என்ன நடந்தது? உண்மையாகவே நடுவர் அவ்வாறு செயல்பட்டாரா? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது..
ஹரிஸ் ரவூப் வீசிய 46வது ஓவரின் கடைசி பந்தில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ட்ரைக்கில் ஷம்சியும், ஆஃப் ஸ்ட்ரைக்கில் கேசவ் மகாராஜும் இருந்தனர். அந்த ஓவரின் கடைசி பந்தை வீசினார் ஹரிஸ் ரவூப். ஆனால் அதனை எதிர்கொள்ள முடியாத ஷம்சி பந்தை பேடில் வாங்கினார்.
உடனே ஹரிஸ் ரவூப் மற்றும் சக பாகிஸ்தான் வீரர்கள் LBW-க்காக அப்பீல் செய்தனர். ஆனால் களத்தில் இருந்த நடுவர் நாட் அவுட் என தீர்ப்பளித்தார். அதன்பின் கலந்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ர்வியு கேட்டார். மூன்றாவது அம்பயரின் ஆய்வில் பந்து லெக் ஸ்டம்பை உரசி சென்றது தெளிவாக தெரிந்தது.
ஆனாலும், மூன்றாவது நடுவர் அதனை UMPIRE'S CALL என தீர்ப்பளித்தார். அதாவது, களத்தில் உள்ள அம்பயரின் முடிவே இறுதியானது என்பது தான் அதற்கு அர்த்தம். இதனை அடுத்து 48வது ஓவரின் 2வது பந்தில் கேசவ் மகாராஜ் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதில் இருந்து தான் விமர்சனங்கள் வர தொடங்கின.
டிஆர்எஸ் முறையில் பந்தானது ஸ்டம்பை உரசியது தெளிவாக தெரிந்தும், களத்தில் உள்ள அம்பயரின் முடிவு என்று கூறுவதற்கு எதற்கு டெக்னாலஜி. நடுவர்களின் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும், அப்படியான தவறுகளை குறைப்பதற்கும் தான் இந்த டெக்னாலஜி. அதிலும் UMPIRE'S CALL என முடிவு கூறுவது சரியா என இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மட்டுமல்லாது பல கிரிக்கெட் வீரர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் "மோசமான அம்பயரிங் மற்றும் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் அணி ஒரு உலக கோப்பை தொடரை இழந்து இருக்கிறது. ஐசிசி இந்த விதிகளை மாற்ற வேண்டும்.
பந்து ஸ்டம்பில் பட்டாலே அது அவுட் தான். அதில் நடுவரை கேட்பதற்கு என்ன இருக்கிறது. பிறகு தொழில்நுட்பத்தால் என்ன பயன்" என பதிவிட்டு உள்ளார். மறுபுறம் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது எக்ஸ் பக்கத்தில், "UMPIRE'S CALL பற்றி விளக்கம் அளிப்பதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கும்.
பந்தானது வீரர்களின் பேடில் பட்டு எங்கு செல்லும் என்பதை கணிப்பதைத் தான் நாம் பார்க்கிறோம். பந்தானது 50% ஸ்டம்பை தாக்கி இருந்தால் நாம் 100% உறுதியாக கூறலாம் அவுட் என்று. அதுவே பந்து 50% குறைவாக ஸ்டம்பை தாக்கும்பட்சத்தில், அது சந்தேகத்துக்கு உரியதே. அது ஸ்டம்பை தாக்கி இருக்கவும் செய்யலாம், தாக்கமலும் இருக்கலாம்.
இந்த மாதிரியான நேரங்களில் தான் UMPAIR'S CALL உதவுகிறது. இதுதான் நியாயமான முறையாகும். மேலும், இப்போது உள்ள டெக்னாலஜியானது துல்லியமான முடிவுகளை கொடுக்க முடியவில்லை என்றாலும், வருங்காலங்களில் இந்த டெக்னாஜி முன்னேற்றமடைந்து பந்து ஸ்டம்பை உரசினாலே அது 100% சரியானதாக இருக்கும் என அறிவிக்கும் நாள் வரும்" என பதிவிட்டு உள்ளார்.
அதேநேரம், ஹர்ஷா போக்லேவின் விளக்கத்திற்கு ஹர்பஜன் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார், ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் "பந்து ஸ்டம்ப்பில் பட்டாலே அது அவுட் தான். இதனை எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இன்று பாகிஸ்தானுக்கு இது நேர்ந்ததுள்ளது. நாளை இந்தியாவுக்கு நேரலாம்.
ஐசிசி இப்படியான விதிமுறைகளை மாற்ற வேண்டும். ஒன்று நடுவரின் முடிவுக்கு விடுங்கள் அல்லது டெக்னாலஜி பக்கம் விடுங்கள்" என்று பதில் ட்வீட் பதிவிட்டு உள்ளார். இது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் போட்டியின் முடிவுக்கு பிறகு, "UMPIRE'S CALL என்பது போட்டியின் ஒரு அங்கம். இப்போட்டியில் அது எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. ஒருவேளை அம்பயர் அவுட் கொடுத்து இருந்தால், அரையிறுதி செல்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். இருப்பினும், வர இருக்கும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்.. மேத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!