மும்பை: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதன் 20வது லீக் ஆட்டம் இன்று (அக்.21) பிற்பகல் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென்னாப்பிரிக்கா அணி நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்த இரு அணிகளும் கடந்த ஆட்டத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியைச் சந்தித்தது, இந்த ஆட்டத்திற்கு வந்துள்ளது. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணியுடனும், தென்னாப்பிரிக்கா அணி - நெதர்லாந்து அணியுடனும் தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் என இரண்டிலுமே பிரதான வீரர்களை வைத்திருந்தாலும், நடப்பாண்டு உலகக் கோப்பை தொடக்கம் முதல் தடுமாறியே வருகிறது. பேட்டிங்கில் ஜோ ரூட் மற்றும் டேவிட் மலான் மட்டுமே தொடர்ச்சியாக அணிக்கு ரன்களை சேர்க்கின்றனர். மிடில் ஆர்டரில் அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை.
அதேபோல், லோயர் மிடில் ஆர்டரில் களம் இறங்கும் லியாம் லிவிங்ஸ்டன் தடுமாறியே வருகிறார். கடந்த 3 ஆட்டங்களில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறார் எனத் தெரிகிறது. பந்து வீச்சில் ரீஸ் டோப்லி மட்டுமே விக்கெட்டுகளைக் கைப்பற்றி வருகிறார். மற்ற பந்து வீச்சாளர்களான மார்க் வுட், அதில் ரசீத் ஆகியோர் விக்கெட்களை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை தொடக்க வீரரான குயின்டன் டி காக் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசி ஃபார்மில் இருக்கிறார். சக வீரர்களான ஐடன் மார்க்ராம், ரஸ்ஸி வான் டெர் டுசென் ஆகியோர் நல்ல நிலையிலேயே உள்ளனர்.
மிடில் ஆர்டரில் களம் காணும் டேவிட் மில்லர் கடந்த போட்டியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நேரத்தில் ஓரளவுக்கு அணிக்கு ரன்களை சேர்க்க உதவினார். பந்து வீச்சில் ககிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் ஆகியோர் விக்கெட்களை வீழ்த்த, சக பந்து வீச்சாளரான லுங்கி என்கிடி அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.