ஹைதராபாத்: ஐசிசி உலக கோப்பையின் 6வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடு வருகின்றன. இந்த போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான வில் யங் மற்றும் டெவோன் கான்வே களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தை கொடுத்த இந்த கூட்டணி 67 ரன்களில் பிரிந்தது. கான்வே, வான் டெர் மெர்வே பந்து வீச்சில் தூக்கியடிக்க முயன்று பாஸ் டி லீடேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து களம் புகுந்த ரச்சின் ரவீந்திரா, வில் யங்குடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தொடக்கம் முதல் நல்ல ஆட்டத்தை விளையாடி வந்த யங் 70 ரன்களில் ஆட்டமிழக்க, அதன் பின் ரச்சினும் 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த டேரில் மிட்செல் 48, க்ளென் பிலிப்ஸ் 4, மார்க் சாப்மேன் 5, டாம் லாதம் 53 ரன்கள் என அவுட் ஆகினர்.
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. சான்ட்னர் 36 ரன்களுடனும், மாட் ஹென்றி 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நெதர்லாந்து அணி சார்பில் ஆர்யன் தத், மீகெரென், மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து நெதர்லாந்து அணி 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக விக்ரம்ஜித் சிங் மற்றும் மேக்ஸ் ஓ'டவுட் ஆட்டத்தை தொடங்கினர். 12 ரன்கள் எடுத்த விக்ரம்ஜித் சிங் 6வது ஒவர் முடிவில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஓ'டவுட்16, பாஸ் டி லீடே 18, தேஜா நிடமானுரு 21, ஸ்காட் எட்வர்ட்ஸ் 30 என அடுத்தடுத்து வெளியேறினர். கொலின் அக்கர்மேன் மட்டும் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னர் 5 விக்கெட்களையும், மாட் ஹென்றி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனால் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு!