சென்னை: இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 13வது உலக கோப்பை தொடரின் இந்தியா- ஆஸ்திரேலியா ஆட்டம் இன்று (அக். 7) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கியது.
இந்த தொடரானது, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை தொடரை இம்முறை இந்தியா மட்டும் முழுவதுமாக நடத்துகிறது. இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், டெல்லி, புனே, மும்பை, லக்னோ, தர்மசாலா, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் நடைபெறுகின்றன.
இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து என 10 நாடுகள் பங்கேற்று உள்ளன. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள், போட்டிகள் நடைபெறும் மைதானங்களில், நடைபெற்று வருகின்றன.
மைதானத்தின் மேற்கூரை, இருக்கைகள், உணவறைகள், ஊடக அறை, கழிவறைகள் உள்ளிட்ட இடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. அதே போல் வீரர்களின் ஓய்வுறை, மைதானத்தின் பிட்ச், மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் என பல்வேறு விஷயங்களில் மைதான நிர்வாகிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில், இன்று (அக். 7) நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதனாத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தை காண, வெளிமாநிலங்களில் இருந்து இந்திய ரசிகர்கள் அனைவரும் சென்னைக்கு படை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் வெற்றி
உலக கோப்பை போட்டிகளில், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடி வந்தாலும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் தான், இந்தியா அணி முதல் முறையாக ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. அந்த போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா தனது வெற்றியை பதிவு செய்தது. இந்தியா - பாகிஸ்தான் அட்டத்திற்கு பிறகு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டி என்றால் அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தான்.
உலக கோப்பையில் இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்:உலக கோப்பை தொடரில், 1975 முதல் 2019 வரை ஆஸ்திரேலியா அணி இதுவரை, 85 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. அதில் 61 வெற்றிகளும், 21 தோல்விகளும் அடங்கும். ஒரு போட்டி டிராவாகவும், இரு போட்டிகளுக்கு எவ்வித முடிவும் கிட்டவில்லை. ஆஸ்திரேலிய அணியானது 1987, 1999, 2003, 2007, 2015 ஆண்டுகள் என 5 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. உலக கோப்பை தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் ஆஸ்திரேலியா தன் வசம் வைத்து உள்ளது.
அதேப்போல் இந்திய அணியானது, உலக கோப்பை தொடரில், 1975 முதல் 2019 ஆம் ஆண்டு வரை மொத்தமாக 84 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 53 வெற்றியும், 29-ல் தோல்வியும் சந்தித்து உள்ளது. ஒரு போட்டி டிராவும், ஒரு போட்டிக்கு எவ்வித முடிவும் இல்லை. மேலும், இந்திய அணி 1983 மற்றும் 2011ஆம் ஆண்டு என இரண்டு முறை உலக கோப்பையை கைப்பற்றி உள்ளது.