டெல்லி: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி 23 லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், அதன் 24வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து இடையேயான போட்டி டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கினர். 3.4 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்த நிலையில், மார்ஸ் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் வந்த ஸ்டீவ் ஸ்மித், வார்னருடன் கைகோர்க்க, இந்த கூட்டணி மளமளவென அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களை கடந்தது.
பின்னர் 23வது ஓவரை வீச வந்த ஆர்யன் தத் அந்த ஓவரின் 3வது பந்தில் ஸ்மித்தை வீழ்த்தினார். 71 ரன்கள் எடுத்த அவர் வான் டெர் மெர்வேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் லபுசேன் 62 ரன்களுடனும், ஜோஸ் இங்கிலிஸ் 14 ரன்களுடனும் ஆட்டமிழந்தார். மறுபக்கம் தொடக்க முதலே சிறப்பாக விளையாடிய வார்னர், சதம் விளாசினார். பின்னர் அவரும் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய மேக்ஸ்வெல், வெறியாட்டம் ஆட, 40 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இந்த அதிரடியான சதத்தின் மூலம் அவர் உலக கோப்பையில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்துள்ளது. நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக லோகன் வான் பீக் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து நெதர்லாந்து அணி 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கினார். ஆனால் நெதர்லாந்து அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை அளித்தது ஆஸ்திரேலிய அணி. களம் இறங்கிய அனைத்து வீரர்களும், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக பெவிலியன் திரும்பினர். 21 ஓவர்கள் முடிவில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விக்ரம்ஜித் சிங் 25, தேஜா நிடமானுரு 14, ஸ்காட் எட்வர்ட்ஸ் 12, சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் 11, கொலின் அக்கர்மேன் 10 ரன்கள் எடுத்தனர்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றனர். இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜம்பா 4 விக்கெட்களையும், மிட்செல் மார்ஸ் 2 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர். மேலும், இந்த வெற்றியின் மூலம் நெட் ரன் ரேட்டில் -0.193 இருந்த ஆஸ்திரேலிய அணி தற்போது +1.142 பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:இலங்கை அணியில் இனி இவருக்கு பதில் இவர்.. யார் அவர்?