சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து):சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (ஜுன் 20) அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்திய கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆட்டம் தொடங்கிய சில ஓவர்களிலேயே, கேப்டன் கோலி ஜேமீசனிடம் தனது விக்கெட்டை இழந்தார்.அவர் இன்று ரன் ஏதும் எடுக்காத நிலையில், 44(132) ரன்களுக்கு நடையைக்கட்டினார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பந்த் அடுத்து களமிறங்கினார். ஆனால், அவரும் 4(22) ரன்களிலேயே ஜேமீசனிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றமளித்தார்.
சொல்லியெடுத்த வாக்னர்
அதைத்தொடர்ந்து ஜடேஜா களம்கண்டார். ரஹானே நேற்றிலிருந்து பொறுமையாக ஆடிவந்த நிலையில், அவருடைய விக்கெட்டை எடுக்க நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வாக்னர் 79ஆவது ஓவரின் மூன்றாம் பந்தை பவுன்சராக வீசினார். அந்த பந்தை லெக் திசையில் காற்றில் பறக்கவிட்டு, இரண்டு ரன்களைச் சேர்த்தார், ரஹானே.
இதைக் கவனித்த வாக்னர், ஸ்கொயர் லெக் திசையில் டாம் லெத்தமை நிற்க வைத்து, மீண்டும் ஒரு ஸ்லோ பவுன்சரை வீசினார். கடைசிப்பந்தை போலவே ரஹானே இதையும் லெக் திசையில் காற்றில் பறக்கவிட, பந்து அழகாக சென்று லெத்தமின் கையில் சென்று அமர்ந்தது.