தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அவர் நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல! - தல தோனி

லண்டன்: நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறார் என இணையதளங்களில் ரசிகர்கள் சோகக் கதைகளை எழுதத்தொடங்கிவிட்டனர். அது குறித்த ஒரு தோனி ரசிகரின் பார்வை.

தோனி

By

Published : Jul 11, 2019, 10:26 AM IST

உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டது. இந்திய வீரர்கள் மட்டுமல்ல இந்திய மக்களின் உலகக்கோப்பை கனவு கலைந்துவிட்டது. 'தோத்தாலும், ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு', 'ஜெய்க்கிறோமோ தோக்குறோமோ... முதல்ல சண்ட செய்யணும்...' என வசனங்கள் பேசினாலும் இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள மனம்மறுக்கிறது.

தோனி அந்த இரண்டாவது ரன்னுக்கு ஓடியிருக்க வேண்டாம், ஜடேஜா போல்ட் ஓவரில் அந்த ஷாட்டை அடித்திருக்க வேண்டாம், கோலி அவசரப்பட்டிருக்க வேண்டாம், தினேஷ் கார்த்திக்கை அந்த இடத்தில் களமிறக்கியிருக்க வேண்டாம் என எவ்வளவு ஆலோசனைகள் இப்போது வழங்கினாலும் இந்திய அணியின் தோல்வி மாறப்போவதில்லை. அதுதான் இப்போதைய நிலை.

நேற்றைய போட்டியில் ஆட்டமிழிந்தபோது

தோனி அவுட் என மைதானத்தின் பெரிய திரையில் காண்பிக்கப்பட்ட அந்த நொடி, இந்திய வீரர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இதயம் நொறுங்கிவிட்டது. அந்த மாவீரன் தான் விளையாடிய உலகக்கோப்பையின் கடைசி போட்டியிலும் வெற்றிக்காக போராடினான் என வரலாறுகள் எழுதப்போகிறது.

கவாஸ்கர் அவுட் ஆகியவுடன் ரேடியோவை நிறுத்தியவர்கள், சச்சின் அவுட் ஆகியவுடன் தொலைக்காட்சியை நிறுத்தியவர்கள், நேற்றையப் போட்டியிலும் சரி, 2015 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் சரி... தோனி விக்கெட் வீழ்ந்ததும் பல தொலைக்காட்சிகள் அணைக்கப்பட்டது. ஃபேஸ்புக் லாக் அவுட்டுகள் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்கள் சோகக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.

எனது விக்கெட்டை வீழ்த்தினால் தான் உனக்கு வெற்றி நிச்சயம் என்பதை தோனி தொடர்ந்து உலகக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறார். அதுதான் நேற்றையப் போட்டியிலும் வெளிப்பட்டது.

தோனி

போட்டி முடிந்த பின்னர் இணையத்தில் தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என வதந்திகள் கிளம்ப தயாராக இருந்ததைப்போல், கிளம்பியது. தோனி பிறந்தநாளான 7ஆம் தேதி எழுதப்பட்ட 10க்கு 9 பிறந்தநாள் பதிவுகளில் தோனி ஓய்வை அறிவிக்கப்போகிறார் என்ற சோக கீதமே மேலோங்கி இருந்தது.

ஆனால், ஆட்டம் முடிந்து விராட் கோலி, 'ஓய்வு குறித்து தோனி இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை' என்றார். அதுதான் உண்மை. தோனி ஓய்வுபெற நினைத்தால் நிச்சயம் இறுதிப் போட்டி என்பதை தெரிவிக்கமாட்டார். எப்படி ஆஸ்திரேலிய தொடரின்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாரோ, அதுபோல் ஒரு கடிதத்தை பிசிசிஐ-யிடம் கொடுத்துவிட்டு தனது மகளுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருப்பார்.

இந்த வருட ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்பீர்களா என தோனியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,'ஹோப்புல்லி எஸ் (Hopefully yes)' என பதில் கொடுத்தார். தோனி என்னும் குதிரையை நிறுத்துவதற்கு 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் தோற்றதுமுதலே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், அதையெல்லாம் அசால்ட்டாக அடித்து நொறுக்கி தன்னிகரில்லா வீரனாக தோனி இன்னும் வளர்ந்துகொண்டே போகிறார்.

இந்த ஆண்டு ஐபில் தொடரின் கடைசிபோட்டியின்போது...

'BATMAN'திரைப்படத்தில்,'you either Die a hero, or live long enough to see yourself become a villain'என்ற வசனம் அடிக்கடி உச்சரிக்கப்படும். இதுதான் பெரும்பாலான ஜாம்பவான் வீரர்களுக்கு ஏற்பட்ட நிலை. பாண்டிங், கங்குலி, கபில் தேவ், மியாந்தத், ஏன் சச்சினுக்கு கூட இந்த நிலை ஏற்பட்டது. ஆனால் இதனை நன்றாக உணர்ந்த ஒரு வீரர் தற்போது தோனி மட்டுமே. தோனி ஆடிக்கொண்டிருக்கும் இடத்தில் மாற்று வீரராக வருபவர் வந்துவிட்டால் தோனிக்கு அங்கு வேலையில்லை. தோனி அளவிற்கு இல்லையென்றாலும், தோனிக்கு அருகிலாவது வர வேண்டும். அதற்காக தான் தோனி காத்துக்கொண்டிருக்கிறார்.

எந்த முக்கிய வீரர் இல்லையென்றாலும் இந்திய கிரிக்கெட் அணி தடுமாற்றம் அடையக்கூடாது என யோசித்து தோனி உருவாக்கிய அணிக்கு கோலி தலைமை தாங்கிக் கொண்டிருக்கிறார். கங்குலியிடம் அணி எப்படி ஒப்படைக்கப்பட்டதோ, அதே நிலையில் தான் தோனியிடமும் 2007ல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்துதான் இந்திய அணியின் கிராஃப் ஏறத்தொடங்கியது. அதனை கோலி சிறப்பாக அறுவடை செய்ய தவறிவிட்டார். அப்படி ஏறிய இந்திய அணியின் கிராஃப், நான்காவது வீரராக களமிறங்கப்போவது யார்?, பயிற்சியாளர் கும்ப்ளே வெளியேற்றம், ஜான் ரைட் போல் ஒரு பயிற்சியாளர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக வந்து கோலிக்கு ஒத்தூதுபவராக இருந்து உலகக்கோப்பையை தவறவிட்டது என இந்த மூன்று ஆண்டுகளில் சரசரவென சரிந்துள்ளது.

முதல் முறையாக கேப்டன்சி பொறுப்பையேற்று தோனி கோப்பையை கைப்பற்றியபோது..

கேப்டனாக இருந்தபோது வாங்கிய கோப்பையை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு ஓரம்போன தோனிக்கு, கோப்பையை கொடுத்துக் கொண்டாட வேண்டிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர் ‘கோலி’ தலைமையிலான இந்திய அணியினர். தற்போது தோனியின் வயது காரணமாக ஓய்வுபெறப்போகிறார் என பேசப்பட்டு வருகிறது. ஆனால், மற்ற வீரர்களில் இருந்து இங்கே தான் தோனி வித்தியாசப்படுகிறார். தோனி தனது உடற்தகுதியில் வேறு மாதிரி முன்னேறியிருக்கிறார். இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு சரிசமமாக தோனியால் ஓட முடியும். எனவே தோனி தான் தனது ஓய்வு முடிவை எடுக்க வேண்டும் என நிலைக்கு தன்னைத்தானே உயர்த்திக்கொண்டுள்ளார், அவரின் கடின உழைப்புக்கு இதுவும் ஒரு சான்று!

ரசிகர்களின் விமர்சனங்கள் என்றும் தோனியை பாதிப்படைய செய்யாது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு ஏற்றவாறு அணியை கட்டமைக்க முடியுமா என்ற கேள்வி உள்ளது. அதேபோல் கோலி தொடர்ந்து அணியை வழிநடத்துவாரா என்ற பேச்சுகளும் எழத் தொடங்கியுள்ளது. இவையனைத்திற்கும் காலம் தான் பதில் சொல்லும்.

2015 உலகக்கோப்பை அரையுறுதி போட்டிக்கு பின்னான செய்தியாளர் சந்திப்பில்...

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சச்சினுக்கு பிறகு 130 கோடி மக்களையும் நம்ப வைக்க தோனி என்ற ஒருவரால் மட்டுமே முடிந்தது. தோனி என்னும் போராட்ட வீரனுக்கு, முன்னின்று போராட மட்டுமே தெரியும். அவர் கிரிக்கெட் ஆட நினைக்கும் வரை ஆடட்டும். ரசிகர்களின் கண்ணீர் கட்டுரைகள் சிறிது காலம் தள்ளிப்போகட்டும். தோனி விளையாட வேண்டும் என நினைக்கும் தோனி ரசிகர்கள், 2015 அரையிறுதி போட்டியில் செய்தியாளர்களிடம் தோனி பேசியதுபோல் பேசி அனுப்பிவிடுங்கள். அதுவரை தோனி... தோனி... தோனி..!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details