உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இங்கிலாந்து, வேல்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் ஜூன் 5ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இப்போட்டியின்போது, இந்திய விக்கெட் கீப்பரான எம்.எஸ். தோனி, விக்கெட் கீப்பிங்கிற்காக பயன்படுத்திய கையுறையில் இந்திய துணை ராணுவப்படையின் அடையாளம் இடம்பெற்றிருந்தது. இதைக்கண்ட தோனியின் ரசிகர்கள், ராணுவத்தினர் மீது வைத்துள்ள மரியாதை, அன்பு குறித்து புகழ்ந்து தள்ளி அப்படத்தை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, கிரிக்கெட் போட்டிகளின்போது வீரர்கள் அணியும் உடை, கையுறை உள்ளிட்டவற்றில் அரசியல், சமூகம் சார்ந்த சொந்த விருப்பத்தை வெளிப்படுத்தும் கருத்துகளுக்கு அனுமதி இல்லை என்பதால் தோனியின் கையுறையில் இடம்பெற்றிருக்கும் ராணுவ அடையாளத்தை நீக்க வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயிடம் பரிந்துரை செய்துள்ளது.