ரசிகர்கள் எதிர்பார்க்காத பல்வேறு திருப்புமுனைகளுடன் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நடந்து முடிந்தது. இதில், இங்கிலாந்து அணி பவுண்ட்ரிகள் கணக்கில் நியூசிலாந்து அணியிடம் வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று அசத்தியது. இப்போட்டி முடிவடைந்தாலும், ஐசிசியின் விதி, அம்பயரின் தீர்ப்பு என பல்வேறு குற்றச்சாட்டுகள் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
242 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணிக்கு கடைசி மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், போல்ட் வீசிய பந்தை மிட் விக்கெட் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் எடுக்க ஸ்டோக்ஸ் முயற்சித்தார். அப்போது, நியூசிலாந்து வீரர் கப்தில் அடித்த த்ரோ ஸ்டோக்ஸின் பேட் மீது பட்டு பந்து பவுண்ட்ரிக்கு சென்றது.
இதனால், ஸ்டோக்ஸ் அவுட் ஆகுவதில் இருந்து எஸ்கேப் ஆனார். இது மட்டுமில்லாமல், ஓவர் த்ரோவிற்காக அம்பயர் குமார் தர்மசேனா மொத்தம் ஆறு ரன்களை வழங்கினார். இவரது இந்த தீர்ப்பு ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றியது.