இங்கிலாந்தில் மே 30ஆம் தேதி தொடங்கிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கோலகலமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இரு அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை என்பதால் நேற்றையப் போட்டியில் யார் உலகக்கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கடைசி பந்து வரை சென்ற ஆட்டம் சமன் ஆனதால், முதன்முறையாக சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சமநிலை பெற்றதால் பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இறுதியாட்டத்தின் இறுதி நிமிடம் இதனால் இங்கிலாந்து அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. சிறப்பாக ஆடிய நியூசிலாந்து அணியின் உலகக்கோப்பை கனவு ஐசிசியின் விதியால் தகர்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி முடிவு குறித்து பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும் விமர்சனம் செய்துள்ளனர். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப், இந்த பவுண்டரி விதிமுறையை ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. வெற்றியாளரைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம் என்றாலும், பவுண்டரி விதியை கடைப்பிடித்ததற்கு பதிலாக கோப்பையை பகிர்ந்தளித்திருக்கலாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இறுதியாக உலகக்கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள். இருப்பினும் இறுதிவரை போராடிய நியூசிலாந்து அணியின் பக்கமே தனது இதயம் செல்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், போட்டியின் முடிவு பவுண்டரிகள் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது முட்டாள்தனமான ஒன்று. இந்தப் போட்டி டையில் முடிந்திருக்க வேண்டும். எனினும் இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள் எனப் பதிவிட்டிருந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரெட் லீ, இங்கிலாந்து அணிக்கு வாழ்த்துகள், நியூசிலாந்து அணியின் துரதிர்ஷ்டவசமான தோல்விக்கு வருத்தங்கள். வெற்றியாளரை இதுபோன்றுதீர்மானிப்பது முறையல்ல; இந்த விதியை மாற்ற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.