இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டிகளில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை சந்தித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பாக அதிகபட்சமாக ஷிகர் தவான் 117 ரன்களையும் விராட் கோலி 82 ரன்களையும் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ஹர்த்திக் பாண்டியா 27 பந்துகளில் 4 பவுண்ரிகள் 3 சிக்சர்களுடன் 48 ரன்களையும் குவித்து அசத்தினார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களின் முடிவில் 316 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்ததால் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ஸ்மித் 69 ரன்களையும் வார்னர் 56 ரன்களையும் எடுத்தனர்.
இந்த போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்து வீசிய ஆஸ்திரேலியாவின் ஆடம் சாம்பா, சந்தேகிக்கும் வகையில் பந்தை கையாண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆடம் சாம்பா பந்தை சேதப்படுத்தினாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் ஆட்ட நடுவர்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் இதுபற்றி வெளியான புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி சாம்பாவின் செயலுக்கு விளக்கம் தர வேணடும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.