2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பைத் தொடர் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்திய போட்டியை மட்டுமே அனைவரும் கவனிக்க, சத்தமில்லாமல் நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதியப் போட்டி மிகச்சிறப்பாக அமைந்தது.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, வங்கதேச அணியோ தென்னாப்பிரிக்காவை அடித்த தெம்புடன் நியூசிலாந்தை புரட்டி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக தமீம் இக்பால் - சர்கார் இணை முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது, சர்கார் 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற... இதோ நானும் வந்துவிட்டேன் என மற்றொரு தொடக்க வீரரான தமீம் 24 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய ஆல் - ரவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் சாகிப் அல் ஹசன் - ரஹீம் இணை சிறிது நேரம் போராட, ரஹீம் துரதிஷ்டவசமாக 19 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, சாகிப் தனது பங்கிற்கு அதிரடியாக 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக வங்கதேச அணி 49.2 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.