2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இன்றைய லீக் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இதில் வங்கதேச அணியைப் பொறுத்தவரையில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதையடுத்து, அடுத்த நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியது.
வங்கதேச அணியின் பேட்டிங் வரிசை எந்த அணிக்கும் சளைத்தவர்கள் இல்லை எனக் கூறும் விதமாக விளையாடிவருவது பலம் வாய்ந்த அணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக ஷாகிப் அல் ஹசன் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசி அபாரமான ஃபார்முடன் இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாகிப், ரஹீம், சர்கார், மஹ்மதுல்லா ஆகியோரும் பேட்டிங்கில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
பந்துவீச்சில் கேப்டன் மோர்டசா கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். கடந்த மூன்று போட்டிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக பந்துவீசவில்லை என்பதால் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.