14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என... அந்த சிறுமிதான் தற்போது இருபது வருடங்களாக இந்திய அணிக்கு ஆடி பல சாதனைகளைப் படைத்துள்ள மிதாலி ராஜ்.
இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான்.. ஆனால் அந்த மதத்தில் பெரும்பாலானவர்கள் ஆடவர் கிரிக்கெட்டைதான் ரசிக்கிறார்கள். ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னதாகவே உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் 1973ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மட்டுமே இதுவரை உலகக்கோப்பையை வென்று வந்துள்ளனர். முதன்முறையாக 1978க்கு பிறகு, 1997ஆம் ஆண்டுதான் மகளிர் உலகக்கோப்பையை இந்தியா நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கான பயிற்சிகளில் இந்திய சீனியர் வீராங்கனைகள் ஈடுபடுகையில், 14 வயது சிறுமி ஒருவர் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரது பயிற்சியை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம். சிறுமி எவ்வாறு அதிக வேகத்தில் வரும் பந்துகளை எளிதாக விரட்டியடிக்க முடியும் என... அப்போது அவர்களுக்கு ஒரு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பையில் ஆடும் வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாமில் பயிற்சி பெறுவதற்கு இந்த சிறுமியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என...
சிறுவயதில் அதிகமாக தூங்கும் பழக்கமுடைய மிதாலியை அவரது தந்தை, கிரிக்கெட் மீது ஆர்வம்கொண்ட மிதாலியின் அண்ணன் மிதுன் விளையாடும் மைதானத்துக்கு அழைத்துச் சென்று வீட்டுப் பாடம் செய்ய வைத்திருக்கிறார். வீட்டுப் பாடத்தை வேகமாக முடித்த அந்த தூங்குமூஞ்சி சிறுமி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடுகிறார். தினுமும் விளையாட விளையாட கிரிக்கெட் பிடிக்கிறது. இதனைப் பார்த்த மிதுனின் பயிற்சியாளர் ஜோதி பிரசாத், மிதாலியின் ட்ரைவ்களையும், பந்துகளுக்கு ஏற்றவாறு கால்களை சரியாக நகர்த்துவதையும், ஃப்ரெண்ட் ஃபூட்டில் தடுத்து ஆடும் திறனையும் கண்டபோது பெரும் ஆச்சரியத்துக்குள்ளானார். மிதாலியின் தந்தையிடம் பேசி சம்பத் குமார் என்னும் பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி செய்ய பரிந்துரை செய்கிறார்.
அங்கிருந்துதான் மிதாலியின் கனவு தொடங்குகிறது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர் சம்பத், இந்திய அணிக்காக மிதாலி நிச்சயம் ஆடுவார் என உறுதியளிக்கிறார். அப்போது மிதாலியின் வயது 14 மட்டுமே. அதனையடுத்து தான் கற்றுவந்த பரதநாட்டியத்திற்கு குட் பை சொல்லிவிட்டு, முழுக்க முழுக்க பந்தயத்திற்கு தயாராகும் குதிரைபோல கிரிக்கெட் பயிற்சியில் முழுமூச்சுடன் மிதாலி ஈடுபட்டுள்ளார். பின்னர், உலகக்கோப்பை தொடருக்கு வயதின் காரணமாக மிதாலி தேர்வு செய்யப்படவில்லை.
பின்னர் தொடர்ந்து பயிற்சியில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். காலை, நண்பகல், மாலை மட்டுமல்ல இரவு நேரங்களிலும் பயிற்சி தொடர்கிறது. இரவு நேரங்களில் என்ன பயிற்சி என அம்மா கேட்டபோது, இரவு நேரங்களில் பந்தை சிறப்பாக அடிக்க தொடங்கினால் பகல் நேரத்தில் எப்படி அடிக்கலாம் என பதில் கூறியுள்ளார்.
1997ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. இதனையடுத்து இந்திய அணி அடுத்த சர்வதேச போட்டியை ஒரு வருடத்திற்கும் மேல் ஆடவில்லை. சீனியர் வீராங்கனைகள் வெளியேறுகிறார்கள், நிர்வாகத்தின் பணப்பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையாக எழுகிறது.
அப்போதுதான் இந்திய அணிக்கு 16 வயதே ஆகும் மிதாலி ராஜ் தேர்வு செய்யப்படுகிறார். 1999 ஜூன் 26, அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டி. மிதாலி ராஜ் - ரேஷ்மா காந்தி இணையர் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்குகின்றனர். முதல் போட்டியிலேயே இறுதிவரை ஆட்டமிழக்காமல் சதம் விளாசி 114 ரன்கள் சேர்க்கிறார். சீனியர் வீராங்கனைகளுக்கு தெரிந்துவிட்டது, இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம் கண்முன் ’கெத்து’காட்டிக் கொண்டிருக்கிறது என...
தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடர்களில் எல்லாம் மிதாலியின் ருத்ரதாண்டவம். மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் என அதிரடியாக கலக்கியபோது, திடீரென மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு நாடு திரும்பினார். மிதாலி இல்லாமல் சமாளிக்க முடியாத இந்திய அணி, உலகக்கோப்பை தொடரைவிட்டு வெளியேறியது. மிதாலியின் ஆட்டத்தைப் பார்த்து முதன்முறையாக இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லப் போகிறது என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் விளாசியதால், முதல் டெஸ்ட் போட்டியில் மிதாலி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்கிறது. ஆனால் முதல் போட்டியிலேயே டக் அவுட்.