சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் குளோபல் டி20 தொடரில் டொரண்டோ நேஷனல்ஸ் அணி கேப்டனாக பங்கேற்று விளையாடிவருகிறார்.
இதன் முதல் போட்டியில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியை எதிர்த்து வான்கோவர் க்நைட்ஸ் அணி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக தாமஸ் - மெக்கல்லம் ஜோடி களமிறங்கினர். மெக்கல்லம் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத் தொடர்ந்து வந்த காலம் லெக்லாய்டு 17 ரன்களில் வெளியேறினார்.
நடுவரின் தவறான தீர்ப்பு - வெளியேறிய யுவராஜ் சிங் பின்னர் கேப்டன் யுவராஜ் சிங் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 17ஆவது ஓவரின்போது ரிஸ்வான் சீமா வீசிய பந்தை கிரீஸ் வெளியே வந்து அடிக்க முயன்றபோது, பந்து யுவராஜ் சிங்கின் பேட்டில் எட்ஜாகி கீப்பரின் நெஞ்சில் பட்டு போல்ட் மீது விழுந்தது. அச்சமயத்தில் யுவராஜ் கிரீஸிற்கு வெளியே இருந்ததால் அவுட் என நினைத்து பெவிலியின் திரும்பினார். ஆனால் கீப்பரின் நெஞ்சில் அடித்து பந்து போல்டில் விழுந்தபோது யுவராஜ் சிங் கிரீஸுக்குள் இருந்தது ரீ-ப்ளேயில் தெரியவந்தது.
நடுவரின் கவனக்குறைவே யுவராஜ் சிங் ஆட்டமிழந்து வெளியேறியதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஓய்வுக்குப் பிறகு முதன்முறையாக யுவராஜ் சிங் களமிறங்கியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நடுவரின் தவறான தீர்ப்பால் யுவராஜ் ஆட்டமிழந்தது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது. இந்த ஆட்டத்தில் வான்கோவர் க்நைட்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.