கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டிலேயே இருந்துவருகின்றனர். இதனால் விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை கழித்துவருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், பந்தை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருப்பது போன்ற காணொலி ஒன்றை வெளியிட்டார். மேலும் அக்காணொலியுடன், ‘இப்படித்தான் வீட்டிலிருந்து கரோனாவுடன் போராடுவதாகவும், இந்தச் சவாலை சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஏற்றுக்கொண்டு சவாலை செய்துமுடிக்க வேண்டும்” என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
இச்சவாலை ஏற்ற இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், சவாலை செய்து முடித்து காணொலியை வெளியிட்டிருந்தார். மேலும் அவர் இச்சவாலை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்திய அணியின் ஷிகர் தவான் ஆகியோரை சவாலை ஏற்கும்படி பரிந்துரைத்துள்ளார்.