ஐசிசி கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் 8 அணிகளுக்கு இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடர்கள் அடிப்படையில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சாம்பியன் கோப்பைக்காக மோதும்.
இதில் தொடக்கத்திலிருந்து இந்தியா முதல் இடம் வகித்துவந்தது. ஆனால் கரோனா தொற்று காரணமாக பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், அணிகளின் விழுக்காடு அடிப்படையில் தரவரிசை கணக்கிடப்படும் என ஐசிசி சமீபத்தில் அறிவித்தது.
2ஆம் இடத்தில் இந்தியா
இதனால் இப்பட்டியலில் இந்திய அணி 2ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா மூன்று தொடர்களில் 296 புள்ளிகள் பெற்றிருந்தாலும், விழுக்காடு அடிப்படையில் 82.22 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. இந்தியா நான்கு தொடர்களில் விளையாடி 360 புள்ளிகள் பெற்று 75 விழுக்காட்டுடன், 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
நியூசி. முன்னேற்றம்
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதனால் 300 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து அணி 62.5 விழுக்காட்டுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது.
சிக்கலில் இந்தியா
மேலும் நியூசிலாந்து அணி அடுத்த மாதம் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான வெற்றிகளைப் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்தத் தொடர்களில் இந்திய அணி சறுக்கும்பட்சத்தில், விழுக்காடு அடிப்படையில் நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறும். அதுமட்டுமில்லாமல் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இந்திய அணி இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்பிஎல் டி20: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ்!