தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மனுஷன்யா... தாதாவை புகழ்ந்த பாக்.வீரர்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சக்லைன் முஷ்டாக், பிசிசிஐ தலைவர் கங்குலி குறித்து தனது வீடியோவில் புகழாரம் சூட்டியுள்ளார்.

கங்குலி, ganguly, saqlain mushtaq
கங்குலி, ganguly, saqlain mushtaq

By

Published : Dec 25, 2019, 10:08 PM IST

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்பது உலக கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவிவரும் எல்லைப் பிரச்னை போன்ற அரசியல் ரீதியிலான விஷயங்கள் இருப்பதே ஆகும். இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் சமயங்களில் இருநாட்டு வீரர்களும் எலியும் பூனையுமாய் இருந்தாலும் போட்டிக்கு வெளியே உள்ள அவர்களின் நட்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான சக்லைன் முஷ்டாக், தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரங் கங்குலி உடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர், இந்திய அணி 2005-06இல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது நான் சசெக்ஸ் (sussex) அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் எனக்கு கால்மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனால் நான் கடுமையான மன உளைச்சலில் இருந்தேன்.

பின்னர் இந்திய அணி சசெக்ஸ் அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதில் விளையாடாத கங்குலி, போட்டியைப் பார்க்க வந்திருந்தார். அவர், என்னை பால்கனியில் இருந்து பார்த்துள்ளார். ஆனால் நான் அவரை பார்க்கவில்லை. ஏனெனில் எங்கள் அணி வீரர்களின் அறை வேறு பக்கத்தை நோக்கி அமைந்திருந்தது.

பின்னர் காயத்திலிருந்து மீண்டு கொண்டிருந்த என்னை பார்க்க கங்குலி, நேராக நான் இருந்த வீரர்களின் அறைக்கு வந்தார். அவர் எனது காயம் குறித்தும் குடும்பம் குறித்தும் விசாரித்தார். என்னுடன் காபி அருந்திய அவர் சுமார் 40 நிமிடங்கள் என்னுடன் உரையாடினார். அந்த உரையாடலில் அவர் என் இதயத்தை வென்றார் என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் அதிகளவிலான ஆர்வத்தை பார்க்க முடியும். சில நேரங்களில் கருத்து வேறுபாடுகளும் உண்டாவதுண்டு. அதில் நானும் இருந்திருக்கிறேன். ஆனால் போட்டி முடிந்தபின் அவை அனைத்தையும் வீரர்கள் விட்டுவிடுவார்கள். எனக்கும் கங்குலிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடு இருந்துள்ளது என்றார்.

மேலும் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயலாற்றியிருக்கிறார். எனவே அவர் தற்போது பிசிசிஐ தலைவராக கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்வார் என நம்புவதாகவும் அவருக்கு வாழ்த்துகள் என்றும் சக்லைன் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஏஎஃப்சி கால்பந்து சாம்பியன்ஷிப்பில் வீடியோ நடுவர் முறை அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details