நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக நேற்று நிறைவடைந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்திருந்தது.
அந்த அணியில் கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ஹென்றி நிக்கோலஸ் 89 ரன்களுடனும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்றி நிக்கோலஸ் சர்வதேச டெஸ்டில் ஆறாவது சதத்தைப் பதிவுசெய்தார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்டில் நான்காவது முறையாக இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்தார்.
பின்னர் 157 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹென்றி நிக்கோலஸ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 238 ரன்களில் கேன் வில்லியம்சனும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் களமிறங்கிய மிட்செல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 600 ரன்களைக் கடந்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 659 ரன்களை எடுத்திருந்த நியூசிலாந்து அணி டிக்ளர் செய்தது. மேலும் முதல் இன்னிங்ஸில் 362 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 8 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியில் அபித் அலி 7 ரன்களுடனும், முகமது அபாஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:'அடுத்த சவால்களுக்கு தயார்' - நம்பிக்கையில் நடராஜன்!