குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மேலும் இப்போட்டியில் அக்சர் பட்டேல் இரண்டு இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்டில் தனது 400ஆவது விக்கெட்டை இப்போட்டியில் கைப்பற்றினார்.
ஆனால், ஐந்து நாள்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியானது 2 நாள்களிலேயே முடிவடைந்ததால் போட்டியைக் காண வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். மேலும், மைதானத்தின் தன்மை மற்றும் பிட்ச் முறையாக இல்லாததே காரணம் என்ற சர்ச்சையும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதிலும், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவில்லை, பிட்ச்தான் வெற்றியைத் தந்துள்ளது என்ற கருத்துகளும் வலுத்தன.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஒரு நல்ல கிரிக்கெட் பிட்ச் என்பது என்ன? அதனை யார் தீர்மானிக்கிறார்கள்? என்று காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அஸ்வின், "நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், நல்ல பிட்ச் என்றால் என்ன? அதற்கு ஏதேனும் விதிமுறைகள் இருக்கிறதா? கிரிக்கெட் என்றாலே பந்திற்கும் பேட்டுக்கும் நடக்கும் போட்டிதான். பவுலர்களும் போட்டியில் இருக்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்க வேண்டும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
'நல்ல பிட்ச் என்பதை யார் தீர்மானிக்கிறார்கள் ?' - கொதித்தெழும் அஸ்வின் ஆனால் நல்ல பிட்ச் என்றால் என்ன? யார் அதனை தீர்மானிக்கிறார்கள்? டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாள்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் அடுத்த மூன்று நாள்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்க வேண்டுமா? இந்த விதிமுறைகள் எல்லாம் யார் கொண்டு வந்தார்கள்? இப்போது அதையெல்லாம் தாண்டி நாம் செல்ல வேண்டும்.
இருக்கின்ற ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். எனக்கு தெரிந்து இதில் இங்கிலாந்து வீரர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றே தோன்றுகிறது. மேலும் அவர்கள் இதுபோன்ற மைதானத்திற்கு விளையாடுவதற்கு தங்களை மேம்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இந்திய மகளிர் ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு!