ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரின் முதல் வெற்றியை சென்னை அணி பதிவுசெய்தபோது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.
சென்னை அணியின் முக்கிய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் தங்களது சொந்த காரணங்களுக்காக இந்த சீசனிலிருந்து விலகியது இந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன்விளைவு, இதுவரை நடைபெற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றிருக்கும் ஒரே அணி என்ற பெருமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை அணி.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிப்பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே அணியில் இளம் வீரர்களுக்கு தோனி தொடர்ந்து வாய்ப்பை மறுத்துவந்தார். குறிப்பாக ஒரு போட்டியில் பங்கேற்று நன்றாக விளையாடிய ஜெகதீசனுக்கு அடுத்தப் போட்டியில் தோனி வாய்ப்பு மறுத்ததும், கேதர் ஜாதவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதும் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய தோனி, இளம் வீரர்களை அணியில் தேர்வு செய்ய அவர்களிடம் போதிய உத்வேகம் இல்லை என்று தெரிவித்தது கிரிக்கெட் வட்டாரங்களில் பேசும் பொருளாகியுள்ளது.