புதிதாக அமைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் நேற்று ஆடவர் கிரிக்கெட் வீரர்களைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழுத் தலைவருக்கான நேர்காணலை நடத்தினர். அதில் 40 விண்ணப்பங்கள் பெறப்பட்டு லக்ஷமண் சிவராமகிருஷ்ணன், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் செளகான், சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் ஆகியோர் இறுதிக்கட்ட நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டனர்.
அதில் தேர்வுக்குழு தலைவராக சுனில் ஜோஷியும், தேர்வுக் குழு உறுப்பினராக ஹர்விந்தர் சிங்கும் நியமிக்கப்பட்டனர். அந்த நேர்காணலில், உலகக்கோப்பைத் தொடருக்கு பிறகு கிரிக்கெட்டிலிருந்து விலகியிருக்கும் தோனியின் எதிர்காலம் பற்றி என்ன முடிவு செய்வீர்கள், கேப்டன் விராட் கோலியை எவ்வாறு கையாளுவீர்கள் என்ற இரண்டு பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடருக்கு பின் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த தோனி, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். ஐபிஎல் தொடரில் தோனி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவரை அணியில் சேர்க்க வேண்டியநிலை ஏற்படும். ஆனால் 38 வயதில் மீண்டும் அணிக்குத் தேர்வு செய்தால், இளம் வீரர்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும். எனவே தோனியின் எதிர்காலம் பற்றி என்ன முடிவு செய்வீர்கள் எனக் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.