இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியானது இன்று சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.
இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் கே.எல்.ராகுல் 6 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மாவும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தத் தொடங்கினர். இதில் ஸ்ரேயஸ் ஐயர் தனது ஐந்தாவது ஒருநாள் அரைசத்தை அடித்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் 70 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் 71 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 287 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக காட்ரோல், கீமோ பால், அல்ஸாரி ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதனையடுத்து வெற்றியை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சுனில் ஆம்ரிஸ் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மையர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் பந்துவீச்சை திணறடித்தார்.
அதிரடியாக விளையாடிய ஹெட்மையர் 85 பந்துகளில் சதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 139 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாய் ஹோப் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஏழாவது சதத்தை நிறைவு செய்த்தார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் வெற்றி இலக்கையடைந்து, முதலாவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற ஷிம்ரான் ஹெட்மையர் ஆட்டநாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: ’தூக்கிலிட என்னை அனுமதியுங்கள்’ - ரத்தத்தில் கடிதம் எழுதிய வர்திகா சிங்!