ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடைக் காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது. கடந்த 7 ஆண்டுகளாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ஸ்ரீசாந்த், முதல் முறையாக சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் கேரள அணிக்காக களமிறங்கினார்.
மும்பையில் நடந்த புதுச்சேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் களமிறங்கி பந்துவீசினார். இந்தப் போட்டியில் ஸ்ரீசாந்த் 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
37 வயதாகும் ஸ்ரீசாந்த் இன்னும் தன்னுடைய பந்துவீச்சில் எந்தவிதமான வேகக்குறைபாடும் இல்லாமல் வீசியதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போட்டியில் விக்கெட்டை வீழ்த்திய ஸ்ரீசாந்த், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக மைதானத்தைத் தொட்டு வணங்கிய கணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் அப்போட்டியில் கேரளா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதுகுறித்து தனட் ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீசாந்த், “எனக்கு அன்பும், ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி. இது தொடக்கம்தான். உங்களின் வாழ்த்துகள், பிரார்த்தனைகளால் இன்னும் நான் அதிகமான இலக்கை அடைவேன். எனக்கு மீண்டும் இந்த வாய்ப்பை வழங்கிய இந்திய கிரிக்கெட்டுக்கும், பிசிசிஐக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி : தமிழ்நாடு அபார வெற்றி!