லக்னோ: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது, நோபால் அறிவித்த அம்பயரையே தனது புத்திசாலித்தனத்தால் பொல்லார்ட் டெட் பாலாக அறிவிக்கச் செய்து, சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸட் போட்டி கொண்ட தொடர் இந்தியாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையே லக்னோவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதன்மூலம், அந்த அணி மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்லும் முதல் ஒருநாள் தொடர் இதுவாகும்.
இதனிடையே இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான செயலால் அம்பயர் நோஸ் கட் வாங்கியுள்ளார். 25ஆவது ஓவரின் முதல் பந்தை வீச வந்த பொல்லார்ட், கிரீஸுக்கு வெளியே கால் வைத்துள்ளார். இதைப் பார்த்த அம்பயர் அகமது ஷா துராரி நோபால் என அறிவிக்க, இதை சுதாரித்துக் கொண்ட பொல்லார்ட் பந்தை வீசாமலேயே விட்டார்.
இதனால், நோபால் என அறிவித்த அம்பயர் பொல்லார்ட்டின் யுக்தியால் டெட் பால் என அறிவித்தார். பொல்லார்ட்டின் குசும்புத்தனத்தனமான இந்தச் செயல் நடுவரை சிரிக்க வைத்தது.