ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் டி20 உலகக்கோப்பையின் 10ஆவது போட்டி இன்று அந்நாட்டு தலைநகர் கான்பெராவில் நடைபெற்றது. இதில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா அணி, வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்செய்த ஆஸ்திரேலிய அணியில் விக்கெட் கீப்பர் அலிசா ஹீலே, பெத் மூனி ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாகக் களமிறங்கினர். இருவரும் வங்கதேச அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளும், சிக்சர்களுமாக வெளுத்துவாங்கினர்.
இதனால், இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 151 ரன்களைச் சேர்த்த நிலையில், ஆட்டத்தின் 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் அலிசா ஹீலே 83 ரன்களில் ஆட்டமிழந்தார். 53 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களையும் பறக்கவிட்டார். அலிசா ஹீலேவைத் தொடர்ந்து வந்த ஆஷ்லி கார்ட்னர், பெத் மூனிவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டியதால், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன்களைக் குவித்தது.
பெத் மூனி 58 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் உள்பட 81 ரன்களுடனும், ஆஷ்லி கார்ட்னர் ஒன்பது பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, 190 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
மெகன் ஷூட் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்த ஷமினா சுல்தானா வங்கதேச அணி தரப்பில் ஃபர்கனா 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஷூட் மூன்று, ஜெஸ் ஜோனசென் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இப்போட்டியில் 83 ரன்கள் விளாசிய அலிசா ஹீலே ஆட்டநாயகி விருதை பெற்றார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள 11ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா-தாய்லாந்து அணிகளும், அதன்பின் 12ஆவது போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளும் மோதவுள்ளன.
இதையும் படிங்க:ஐபிஎல்லில் மீண்டும் கேப்டனாக அவதாரம் எடுக்கவுள்ள வார்னர்!