தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சேவாக் சொன்னது அப்போ புரியல இப்போ புரிஞ்சுது : வார்னர் - பாகிஸ்தானுக்கு எதிராக வார்னர் 335 ரன்கள்

டி20 போட்டிகளை விட தான் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வேன் என சேவாக் முன்பு கணித்ததாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் தெரிவித்துள்ளார்.

Warner
Warner

By

Published : Dec 2, 2019, 12:50 PM IST

இது குறித்து வார்னர் கூறுகையில்,

"ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது நான் சேவாக்கை சந்தித்தேன். அப்போது டி20 போட்டியை விட நான் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பேன் என அவர் என்னிடம் கூறினார். முதல்தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத நான் எப்படி டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக ஆக முடியும், சும்மா சொல்லாதீங்க" என்றேன்.

அப்போது அவர், "டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப், கல்லி, கவர், மிட் விக்கெட் திசையில் ஃபீல்டர்கள் இருப்பார்கள். ஆனால், மிட் ஆஃப் மிட் ஆன் திசையில் ஃபீல்டர்கள் இருக்க மாட்டார்கள். இதனால், ஆரம்பத்தில் நீ அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி, ஆட்டநாள் முழுவதும் அதிரடியாக விளையாடலாம் என்றார். அவர் சொன்ன இந்த விஷயம் என் மனதில் பதிந்தது. இதைப் பற்றி நாங்கள் இருவரும் விவாதிக்கும் போது எளிதாகதான் இருந்தது" என வார்னர் தெரிவித்தார்.

வார்னர் - சேவாக்

வார்னர், சேவாக் இருவரும் பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்து விளையாடுவதுதான் அவர்களது இயல்பு. இதனால், வார்னரின் ஆட்டம் சேவாக்கின் ஆட்டத்திறனுடன் எப்போதும் ஒப்பீடு செய்யப்படும். ஆனாலும், வார்னர் டி20, ஒருநாள் போட்டிகளில்தான் செட் ஆவார் என்றும் டெஸ்ட் போட்டிகளில் செட் ஆக மாட்டார் எனவும் ரசிகர்கள் விமர்சித்தனர்.

பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி மீண்டும் அணிக்கு ரிஎன்ட்ரி தந்த வார்னர் ஐபிஎல், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். ஆனால், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வெறும் 95 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான ஃபார்மில் இருந்ததுதான் அதற்கு முக்கிய காரணம். தற்போது தான் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவேன் என்பதை பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரில் நிரூபித்துக்காட்டியுள்ளார் வார்னர்.

வார்னர்

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய அவர், அடிலெய்டில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்து மிரட்டினார். 418 பந்துகளில் 39 பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என வார்னர் 335 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 2004இல் சேவாக் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் முச்சதம் அடித்ததைப் போல வார்னர் தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் விளாசியுள்ளார். வார்னர் 2009 ஐபிஎல் தொடரில் சேவாக்குடன் சேர்ந்து டெல்லி அணிக்காக விளையாடினார். சேவாக் முன்பு கணித்ததைப் போலவே தற்போது வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேனாக அவதாரம் எடுக்கத் தொடங்கியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details