புனேவில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 336 பந்துகளில் 33 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 254 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளையும் இந்திய கேப்டன் விராட் கோலி தனது வசப்படுத்தியுள்ளார்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக 10 இன்னிங்ஸ்களில் விராட் கோலி சதம் விளாசவில்லை என்பதால், இந்தப் போட்டியில் நிச்சயம் சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு விராட் கோலி ரசிகர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 26ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அதையடுத்து தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி, 150 ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் அதிகமுறை 150 ரன்கள் எடுத்த கேப்டன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார். அதையடுத்து 7ஆவது முறையாக இரட்டை சதம் விளாசிய விராட் கோலி, இந்திய வீரர்களில் அதிக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னதாக சேவாக் இந்த சாதனையை படைத்திருந்தார். தற்போது சேவாக் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.