கடந்த ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், ஊதியம், விளம்பரம், ஒப்பந்தம் ஆகியவற்றின் மூலம் 106.4 மில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டி சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதலிடத்தில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து 105 மில்லியன் டாலர்களுடன் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் ரொனால்டோ இரண்டாம் இடத்திலும், 104 மில்லியன் டாலர்களுடன் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இந்த நிலையில், இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே கிரிக்கெட்டர், ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இவர் கடந்த 12 மாதங்களில் விளம்பரம், ஊதியம், ஒப்பந்தம் என மொத்தம் 26 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் ரூ. 196 கோடி) வருவாயாக ஈட்டி இப்பட்டியலில் 34 இடங்கள் முன்னேறி 100ஆவது இடத்திலிருந்து 66ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்தமுறையை காட்டிலும் இம்முறை கோலியின் ஆண்டு வருவாய் ஒரு மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில், கோலி 25 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி 100ஆவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!