இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்றுவந்தன. இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மும்பை அணியும், உத்தரப் பிரதேசம் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரப் பிரதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மாதவ் கௌசிக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
அவருக்கு துணையாக விளையாடிய சமர்த் சிங், அக்ஷ்தீப் சிங் ஆகியோரும் அரைசதம் அடித்து அணிக்கு வலிமை சேர்த்தனர். இதன் மூலம் உத்தரப் பிரதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்களை குவித்தது. இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மாதவ் கௌசிங் 156 ரன்களை சேர்த்தார்.
அதன்பின் இமாலய இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு, வழக்கம் போல தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிவம் மாவி பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இப்போட்டியில் 73 ரன்களை பிரித்வி ஷா அடித்ததன் மூலம், விஜய் ஹசாரே தொடர் வரலாற்றில் ஒரே சீசனில் 800 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதன்பின் களமிறங்கிய ஆதித்யா டாரே அபாரமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். மேலும் 107 பந்துகளில் 118 ரன்களையும் கடந்து அசத்தினார். இதன் மூலம் 41.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேசம் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் மும்பை அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இதையும் படிங்க: யுவி, சச்சின் அதிரடி: இந்தியா லெஜண்ட்ஸ் அபார வெற்றி!