தென் ஆப்பிரிக்காவின் பாட்செஃப்ஸ்ட்ரூமில் இன்று நடைபெற்றுவரும் யு19 உலகக் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் இந்திய அணி, வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்திவருகிறது. இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது முதல்முறை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே மோசமாக அமைந்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வாலுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய திவ்யான்ஷ் சக்னோ இரண்டு ரன்களில் அவுட்டாக இந்திய அணி 6.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
சக்சேனாவின் விக்கெட்டை கைப்பற்றிய மகிழ்ச்சியில் அவிஷேக் தாஸ் இந்த இக்கட்டான நிலையில், வங்கதேச அணியின் மிரட்டலான பந்துவீச்சை யஷஸ்வி ஜெய்ஷ்வால் - திலக் வர்மா ஜோடி நிதானமாகவே எதிர்கொண்டு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து பொறுப்புடன் விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கை தந்தார். இந்த ஜோடி 94 ரன்களை சேர்த்த நிலையில், திலக் வர்மா 38 ரன்களில் தன்சிம் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
யஷஸ்வி ஜெய்ஷ்வால் - திலக் வர்மா ஆட்டத்தின் திருப்புமுனையாக இந்த விக்கெட் இருந்தது. அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ப்ரியம் கார்க் ஏழு ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர், விக்கெட் கீப்பர் துருவ் ஜூரேலுடன் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஷ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார்.
ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே நேர்த்தியான ஷாட்டை விளையாடி வந்த அவர் இன்றைய ஆட்டத்திலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 121 பந்துகளில் எட்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணி 39.5 ஓவரில் நான்கு விக்கெட்டை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தன.
வங்கதேச அணிக்கு கிடைத்த இந்த விக்கெட் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் முற்றிலும் மாற்றியமைத்தது. ஜெய்ஷ்வாலை தொடர்ந்து வந்த சீதஷ் வீர் டக் அவுட்டானார். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பவுண்டரிகள் அடித்து களத்தில் செட் ஆகயிருந்த துருவ் ஜூரேல், சிங்கிள் எடுக்க முயற்சித்தார். ஆனால், நான் - ஸ்ட்ரைக்கரிலிருந்த அதர்வா அங்கோலேக்கருடன் ஏற்பட்ட குழப்த்தால் அவர் தேவையில்லாமல் 22 ரன்களுக்கு ரன் அவுட்டானார்.
இரண்டு ரன்களில் ரன் அவுட்டான ரவி பிஷ்னோய் அதன்பின், ரவி பிஷ்னோய் (2), அதர்வா அங்கோலேக்கர் (3), கார்த்திக் தியாகி (0), சுஷாந்த் மிஷ்ரா (3) ஆகியோர் வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 156 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த இந்திய அணி ஜெய்ஷ்வால் ஆட்டமிழந்த பின் 21 ரன்களை மட்டுமே சேர்த்து ஆறு விக்கெட்டை பறிகொடுத்தது. வங்கதேச அணியில் அவிஷேக் தாஸ் மூன்று, ஷோரிஃபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிங்க:ஐந்தரை ஆண்டுகளுக்கு பின் ரசிகர்கள் முன் மீண்டும் களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர்!