யு19 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ப்ரியம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது.
இப்போட்டியின் முதல் பந்திலிருந்தே இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங் செய்துவந்த வங்கதேச பந்துவீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம், போட்டிமுடிந்த பின் இந்திய வீரர்களிடம் சற்று எல்லை மீறி நடந்துகொண்டார். அவர் இந்திய வீரர்களை நோக்கி ஒருமையில் திட்டியதால் இரு அணி வீரர்களுக்குள் இடையே மோதல் வெடித்ததால் அது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமின்றி, இனி கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டாகப் பார்க்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதுகுறித்து இருதரப்பு வீரர்கள், நடுவர்களிடமும் ஐசிசி விசாரணை நடத்தியது.
அந்த விசாரணையின் முடிவில் மூன்று வங்கதேச வீரர்கள் மீதும் இரண்டு இந்திய வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முகமது ஹிரிதோய், ஷமீம் ஹொசைன் ஆகியோருக்கு ஆறு எதிர்மறை புள்ளிகளை வழங்கியது. மற்றொரு வங்கதேச வீரர் ரகிபுள் ஹொசைனுக்கு ஐந்து எதிர்மறை புள்ளிகளையும் வழங்கியுள்ளது.
ஐந்து வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை இந்திய வீரர்களில் ஆகாஷ் சிங்கிற்கு ஆறு எதிர்மறை புள்ளிகளையும் ரவி பிஷ்னோய்க்கு ஏழு எதிர்மறை புள்ளிகளையும் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஐசிசி கிரிக்கெட் ஜெனரல் மேனேஜர் ஜெஃப் பேசுகையில், ''ஐசிசியின் முக்கியமான போட்டியில் வீரர்கள் விதிமுறைகளை மீறியுள்ளது தவறானது. இதேபோன்ற செயல்பாடுகள் சீனியர் அணிக்குச் செல்லும்போது இருக்கக்கூடாது என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: இனி கிரிக்கெட் ஜென்டில்மேன் கேமாகத்தான் பார்க்கப்படுமா?