முத்தரப்பு மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி மெல்போர்னில் இன்று நடந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்ததால், இன்றையப் போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸி. அணிக்கு முதல் ஓவரே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அலைஸா ஹேலி ரன் ஏதும் எடுக்காமல் தீப்தி ஷர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, பெத் மூனி - ஆஷ்லி கார்டனர் இணை சேர்ந்தது. இந்த இணை இரண்டாவது விக்கெட்டிற்கு 8.2 ஓவர்களில் 62 ரன்கள் சேர்க்க, பெத் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் கேப்டன் மெக் லான்னிங் - ஆஷ்லி இணை சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. இதனிடையே சிறப்பாக ஆடிய ஆஷ்லி 33 பந்துகளில் அரைசதம் கடக்க, ஆஸி. அணி 10 ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய இந்த இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் மெக் 37 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷ்லியும் 93 ரன்களில் பெவிலியன் திரும்ப, ஆஸி. அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 174 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்தனர். முதல் ஓவரிலேயே தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி - ஷஃபாலி இருவரும் 11 ரன்கள் சேர்த்து அதிரடியாக தொடங்கினர். ஒவ்வொரு ஓவருக்கும் மூன்று பவுண்டரிகள் பறக்க இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்கள் முடிவில் 84 ரன்கள் எடுத்தது.