இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் 14ஆம் தேதிமுதல் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது கடினமாக இருந்தாலும், அச்சவாலை எதிர்கொள்ள ஆவலுடன் இருப்பதாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "இந்தியப் பந்துவீச்சாளர்கள் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதால் அவர்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். மேலும் அவர்களது சொந்த மைதானங்களில் இன்னும் சிறப்பாகச் செயல்படுவார்கள்.
அதனால் அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினமான சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தச் சவாலை எதிர்கொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அதேபோல் கடந்தாண்டு இங்கிலாந்து அணிக்காக எனது ஆட்டம் நிலையாக அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக அயர்லாந்து அணிக்கெதிராக நான் விளையாடியது எனக்குப் பெரும் வாய்ப்புகளைத் தந்துள்ளது. மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நான் டெல்லி அணிக்காக களமிறங்க உற்சாகத்துடன் இருக்கிறேன்.
இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிப்பேன் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டி20 அணி: ஈயன் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், ஆடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, மார்க் வூட்.
இதையும் படிங்க: இங்கி. டி20 தொடர்: 'யார்க்கர் நாயகன்' நடராஜன், வருண் பங்கேற்பதில் சிக்கல்?