தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பினார்.
26 வயதான இவர், அனைத்து விதமான போட்டிகளில் பிற அணி வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார். ஆனால், சமீப நாட்களாக ஒருநாள் போட்டிகளில், அவரது பந்துவீச்சு எடுபடாமல் இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆனதற்கு பும்ராவின் ஃபார்ம் அவுட்டும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அவரால், மூன்று ஒருநாள் போட்டிகளில் 30 ஓவர்களை வீசி 164 ரன்களை வழங்கி, ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் இருக்க நேர்ந்தது. இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடந்து முடிந்த, மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றாமல் 38 ரன்களை வழங்கினார்.