தேசத்துக்காக விளையாடுவது என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இருக்கக் கூடிய மிகப்பெரும் கனவு. நேரம் வரும்போது கிரிக்கெட் வீரர்கள் அதை தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத தருணமாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பது உண்மை. அதனால் அனைத்து வீரர்களும் தங்களது முதல் போட்டியிலேயே சிறப்பாக செயல்பட வேண்டுமென்று நினைப்பார்கள்.
மேலும் உள்நாட்டு போட்டிகளிலிருந்து, நேரடியாக சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால் அப்படி தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சரித்திரத்தை மாற்றி எழுதிய வீரர்களும் உண்டு. அவர்களில் சிலரை இங்கு கான்போம்,
எர்ஸ்கைன் ஃபாஸ்டர் (Erskine Foster)
இங்கிலாந்து அணிக்காக தனது முதல் போட்டியை, ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியவர் எர்ஸ்கைன் ஃபாஸ்டர். 1903ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து அணிக்காக களமிறங்கிய ஃபாஸ்டர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெளுத்துவாங்கிய போட்டி அது.
அந்தப் போட்டியில் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ஃபாஸ்டர், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு தனது பவுண்டரிகளால் பதிலடி கொடுத்தார். அந்தப் போட்டியில் அவர் 37 பவுண்டரிகளை விளாசியும் அசத்தினார்.
மேலும் தனது முதல் சர்வதேச போட்டியிலேயே இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஃபாஸ்டர். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஃபாஸ்டர் 287 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்து அணிக்காக எட்டு போட்டிகளில் விளையாடிய ஃபாஸ்டர், தனக்கு ஏற்பட்ட நோய் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். பிறகு எர்ஸ்கைன் ஃபாஸ்டர் தனது 36 ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
பாப் மாஸி (Bob Massie)
தனது முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சினால் புகழின் உச்சியை அடைந்தவர் ஆஸ்திரேலிய அணியின் பாப் மாஸி. இவர் 1972ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார்.
முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சு திறமையினால், பேட்ஸ்மேன்களை திணறடித்த மாஸி, முதல் இன்னிங்ஸில் 84 ரன்களைக் கொடுத்து 8 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 53 ரன்களை மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனைப்படைத்தார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுகப் போட்டியிலேயே 16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆச்சரியமளித்தார். மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 6 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாப் மாஸி, மொத்தம் 33 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
லாரன்ஸ் ரோவ் (Lawrence Rowe)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1972ஆம் ஆண்டு அறிமுகமானவர் லாரன்ஸ் ரோவ். இவர் நியூசிலாந்து அணிக்கெதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய லாரன்ஸ், முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும், இரண்டவது இன்னிங்ஸில் சதமடித்து ஆட்டமிழக்காமலும் இருந்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதமடித்து அசத்திய முதல் வீரர் என்ற பெருமையை லாரன்ஸ் பெற்றார். அப்போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 214 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அப்போட்டியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த லாரன்ஸ், ‘இது என்னுடைய மைதானம். இங்கு என்னை வீழ்த்த யாருமில்லை’ என்று கர்வத்துடன் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய லாரன்ஸ், ஏழு சதங்கள், ஏழு அரைசதங்கள் என 2, 047 ரன்களை எடுத்துள்ளார். அதில் அவர் இங்கிலாந்து அணிக்கெதிராக அடித்த முச்சதமும் அடங்கும்.
நரேந்திர ஹிர்வானி (Narendra Hirwani)
1987ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரில் 19 வயதே ஆன ஒரு சுழற்பந்துவீச்சாளரும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அவர் தான் இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஹிர்வானி.
சென்னையில் நடைபெற்ற அத்தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமான ஹிர்வானி, விவியன், ஹூப்பர் போன்ற ஜாம்பவான்களையும் தனது பந்துவீச்சில் நடையைக் கட்ட செய்தார்.
மேலும் அத்தொடரின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவர் முதல் இன்னிங்ஸில் 61 ரன்களுக்கு 8 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் சென்னை மைதானத்தில் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 16 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபர் என்ற சாதனையைப் படைத்தார் ஹிர்வானி. இந்திய அணிக்காக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹிர்வானி 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாக்ஸ் ருடால்ப் (Jacques Rudolph)
2003ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகமானவர் ஜாக்ஸ் ருடால்ப். இவர் தனது அறிமுகப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இரட்டை சதமடித்து, அனைவரது கவனத்தையும் தன் வசம் ஈர்த்தார்.
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள சிட்டாகாங் மைதானத்தில் கிட்டத்திட்ட எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாக்கு பிடித்து, 222 ரன்களை சேர்த்தார். மேலும் சக அணி வீரரான டிப்பேனார்ருடன் (Dippenaar) இணைந்து பார்ட்னர்ஷிப் முறையில் 429 ரன்களையும் சேர்த்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களால் அடிக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ருடால்ப், 2, 622 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'நான் நீண்ட நாள்கள் தாக்குப்பிடிக்க மாட்டேன் என நினைத்தார்கள்; ஆனால்...?'