தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விக்கெட் கொடுக்காமல் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி! - karaikudi kalai

திருநெல்வேலி: தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கின் இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டிப்பிடித்து காரைக்குடி காளையை எளிதில் வீழ்த்தியது.

திண்டுக்கல் டிராக்கன்ஸ்

By

Published : Jul 29, 2019, 10:40 PM IST

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கின் 14ஆவது போட்டியில் காரைக்குடி காளை அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் டாஸ் வென்ற காரைக்குடி காளை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ஸ்ரீ காந்த் அனிருதா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

ஆனால், நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்து 98 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யபிரகாஷ் 20, மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மான் பாஃப்னாவும் ஸ்ரீனிவாசனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்ரீனிவாசன் ரன் ஏதும் எடுக்காமலே வெளியேறி ஏமாற்றமளித்தார். ஷாஜகான் 17 ரன்கள் எடுத்தார். இறுதியில், 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை காரைக்குடி காளை அணி எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் ராமலிங்கம் மற்றும் முகம்மது தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதன்பின் ஆட வந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களுக்குத் தலைவலியைக் கொடுத்தனர். இறுதி வரை இவர்கள் இருவரின் விக்கெட்டையும் காரைக்குடி காளை அணியின் பந்து வீச்சாளர்களால் எடுக்க முடியவில்லை. முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஹரி நிஷாந்த் 81 ரன்களும் ஜெகதீசன் 78 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details