2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி லீக் தொடரோடு வெளியேறியது. இதனால் கொதிப்படைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், வீரர்களின் வீடுகளுக்கு முன்பாக தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
அந்தத் தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் மனநிலையும் சற்று மாறிதான் போயிருந்தது. அந்த உலகக்கோப்பை தோல்வியை அடுத்து, டி20 கிரிக்கெட் இளைஞர்களுக்கானது என்று மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் விலகிக் கொண்டனர்.
அதற்கு முன்னதாக விரல்விட்டு எண்ணிவிடும் டி20 போட்டிகளில் தான் இந்திய கிரிக்கெட் அணி ஆடியுள்ளது. எனவே அந்தத் தொடரில் இளம் வீரரான தோனி கேப்டனாக்கப்பட்டார். முழுக்க முழுக்க இளம் படையுடன் தென் ஆப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி மீது பெரிதாக எவருக்கும் நம்பிக்கை இல்லை. அதுமட்டுமல்ல, அந்த அணிக்கு பயிற்சியாளரும் இல்லை.
அப்போது அனைத்து பத்திரிகைகளும் ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா தான் உலகக்கோப்பையை வெல்லும் என எழுதினர். ஆனால்அந்த இந்திய இளம்படை பலருக்கும் பதில் கூற காத்துக் கொண்டிருந்தது.
ஸ்காட்லாந்து உடனான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட, அடுத்த நாள் பாகிஸ்தான் உடன் இந்தியா மோதியது. இந்த இடத்திலிருந்துதான் டி20 உலகக்கோப்பைக்கான தீப்பொறி இந்தியாவில் முதலில் பற்றியது.
பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் போட்டி தான் உலகக்கோப்பைத் தொடரின் ஹைலைட். ஒவ்வொரு ஓவரிலும் கிரிக்கெட்டின் பரபரப்பு எகிறியது. பத்திரிகைகள் எழுதியதற்கு நேர்மாறாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய இளம்படை இறுதிக்கு முன்னேறியது.
மறுபுறம், நியூசிலாந்தை வீழ்த்தி பங்காளிகளான பாகிஸ்தான் இறுதிக்கு முன்னேறினர். இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை இறுதியில் மோதியதால் உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. 2007ஆம் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றோடு வெளியேறிய இரு அணிகளும், அடுத்த சில மாதங்களில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்று வரை ஆச்சரியம் தான்.
முதல் இன்னிங்ஸில் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 157 ரன்களை இந்திய அணி எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை சீரான ஓவர்கள் இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட் வீழ்த்திக் கொண்டே வந்தனர். ஆனால் அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் மட்டுமே நிலைத்து நின்று இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்றார்.
இன்று தோனி ஆடிக்கொண்டிருக்கும் ஆட்டத்தை 2007ஆம் ஆண்டில் மிஸ்பா உல் ஹக் உலக மக்களின் கண் முன்னால் செய்து காட்டினார். கடைசி ஓவரில் பாகிஸ்தான் 13 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. மிஸ்பா ஸ்ட்ரைக்கில் இருக்கிறார்.
இந்திய அணியில் ஹர்பஜன் சிங் அல்லது ஜோகிந்தர் ஷர்மா ஆகிய இருவரில் யார் பந்துவீசப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, அனுபவ வீரரான ஹர்பஜன் சிங்கிடம் தான் தோனி பந்தைக் கொடுப்பார் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் தோனியோ, ஜோகிந்தர் ஷர்மாவிடம் பந்தைக் கொடுத்தார்.