கடந்த 2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது பி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய - பெர்முடா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற பெர்முடா அணி இந்தியாவை பேட்டிங் ஆட பணித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டும் எடுத்தார்.
பெர்முடா வீரர் மலாச்சி ஜோன்ஸ் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட உத்தப்பா, பேக்வர்ட் பாயிண்ட் திசையில் அடிக்க, அங்கு ஸ்லிப்பில் நிறுத்தப்பட்டிருந்த 127 கிலோ எடைக்கொண்ட டுவைன் வெல்ராக் ஒற்றைக் கையில் லாவகமாக கேட்ச் பிடித்து விடுவார். அதுமட்டுமல்லாமல் அந்த கேட்ச்சை கொண்டாட அவர் மைதானத்தில் சந்தோஷத்தில் ஓடி மகிழ்வார்.
இதை பார்த்த இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை அடைந்தனர். ஆனால், அதன்பின் கங்குலி, சேவாக், சச்சின், யுவராஜ் உள்ளிட்ட மற்ற மூத்த வீரர்கள் சிறப்பாக ஆடி இந்திய அணி 413 ரன்கள் குவிக்க உதவினர்.
அதுமட்டுமல்லாமல், ஒருநாள் உலகக்கோப்பை அரங்கில் 400 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்தது. மேலும், அந்த போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் பெர்முடா அணியை எளிதாக வீழ்த்தியது. அந்த நிகழ்வு நடந்தது இதே மார்ச் 19 ஆம் நாள் என்பதால் அதை ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளது.