இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. அதன்பின் வந்த கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் தூபே ஆகியோர் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் தொடக்க வீரரான ஷிகார் தவன் தனது அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினார். அதன்பின் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவானும் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து 21 ரன்களில் ரிஷப் பந்தும் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் இந்திய அணி இருபது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது. வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ் ஏழு ரன்களில் வெளியேற, நைம் 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின் ஜோடி சேர்ந்த சவுமியா சர்கார், முஷ்பிக்கூர் ரஹிம் இணை அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டத்து. இதில் அதிரடியாக விளையாடிய சர்கார் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
அதன் பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹிம் அரைசதமடித்து அசத்தினார். இதன் மூலம் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்தது. அந்த அணியின் முஷ்பிக்கூர் ரஹிம் 43 ரன்களில் 60 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக வங்கதேச அணி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. சிறப்பாக விளையாடிய ரஹிம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.