டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே. இவரது பந்துவீச்சுக்கு ஆட்டமிழக்காத பேட்ஸ்மேன்களே இல்லை. ஆஸ்திரேலிய அணிக்காக 1992 முதல் 2007வரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால், இவரது பந்துவீச்சை இந்தியாவின் சச்சின், வெஸ்ட் இண்டீஸின் பிரயன் லாரா ஆகியோர் போல் வெளுத்து வாங்கிய பேட்ஸ்மேன்கள் இல்லை.
இதனால், 1990, 2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் சச்சின் vs வார்னே, லாரா vs வார்னே என கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், 50 வயதான வார்னே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையாக பேசிவந்தார். அப்போது எனது சம காலத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா ஆகியோர்தான் சிறந்த பேட்ஸ்மேன்கள் எனத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், "அனைத்து விதமான தட்பவெட்ப சூழல்களிலும் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் ஒருவரை நான் தேர்வு செய்ய வேண்டும் என்றால் சச்சின் - லாரா இருவருக்கும் கடும் போட்டி நிலவும். ஆனால் நான் சச்சினைதான் தேர்வு செய்வேன். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் கடைசி ஒரு நாளில் 400 ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்றால் நான் நிச்சயம் லாராவைதான் தேர்வு செய்வேன்" என்றார்.