தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#VijayHazare: அரையிறுதியில் எண்ட்ரி தந்த தமிழ்நாடு! - தினேஷ் கார்த்திக்

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு அணி முன்னேறியுள்ளது.

VijayHazare

By

Published : Oct 21, 2019, 7:53 PM IST

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் கர்நாடகா, குஜராத் ஆகிய அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, பஞ்சாப் அணியுடன் மோதியது. அலுரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மந்தீப் சிங் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியில் அபிநவ் முகுந்த் (17), முரளி விஜய் (22), விஜய் சங்கர் (13), கேப்டன் தினேஷ் கார்த்திக் (11) ஆகியோர் சொதப்பினர். இந்த இக்கட்டான நிலையில், சிறப்பாக பேட்டிங் செய்த பாபா அபராஜித் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தமிழ்நாடு அணி 39 ஓவர்களின் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தபோது மழைக்குறுக்கிட்டது.

இதனால், விஜேடி முறைப்படி பஞ்சாப் அணிக்கு 39 ஓவர்களில் 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 12.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களை எடுத்தபோது மீண்டும் மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இப்போட்டியில் முடிவு ஏற்படவில்லை.

இருப்பினும், தமிழ்நாடு அணி (9 வெற்றி) குரூப் பிரிவில் பஞ்சாப் (5 வெற்றி) அணியை விட அதிக வெற்றிகளைப் பெற்றதன் அடிப்படையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதேபோல சத்தீஸ்கர் - மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியும் மழையால் முடிவு கிடைக்காமல் போனது. இதனால், குரூப் போட்டியின் வெற்றிக் கணக்கில் சத்தீஸ்கர் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு, குஜராத் அணியை எதிர்கொள்கிறது. அதேசமயம், அதே நாளில் நடைபெறவுள்ள மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணி, சத்தீஸ்கர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details