2019-20ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் தொடரின் குரூப் ஏ, பி பிரிவுக்கான ஏழாம் சுற்று போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் மோதின. வதோதராவின் மொட்டி பஹ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பரோடா அணி, முகமது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதல் இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அதித் ஷேத் 53 ரன்கள் அடித்தார். தமிழ்நாடு அணி தரப்பில் முகமது ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி 108.4 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து 490 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அபிநவ் முகுந்த் 34 பவுண்டரிகள் உட்பட 206 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின், 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய பரோடா அணி 63.3 ஓவர்களில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், தமிழ்நாடு அணி இப்போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணியை வீழ்த்தியது. தமிழ்நாடு அணி இந்த தொடரில் தொடர்ந்து வெல்லும் இரண்டாவது போட்டி இதுவாகும்.
முன்னதாக, சேப்பாக்கத்தில் நடைபெற்ற ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றிருந்தது. இந்த வெற்றியின்மூலம் தமிழ்நாடு அணி 19 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அணி குரூப் ஏ, பி, பிரிவின் தனது கடைசி போட்டியில் சவுராஷ்டிரா அணியுடன் மோதுகிறது. இப்போட்டி வரும் பிப்ரவரி 12ஆம் தேதி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:புஷ்ஃபயர் கிரிக்கெட்: எனக்கு அப்பறம் லாராதான் இறங்குவார்... ரிக்கி பாண்டிங்