சயீத் முஷ்டாக் அலி டி20 தொடரின் அரையிறுதிச்சுற்று நேற்று (ஜன.29) நடைபெற்றது. முதல் அரையிறுதிச் சுற்றில் தமிழ்நாடு அணி ராஜஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அசோக் மெனாரியா 51 ரன்களை எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் முகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு அருண் கார்த்திக் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைத் தேடித்தந்தார். இதனால் 18.3 ஓவர்களிலேயே தமிழ்நாடு அணி வெற்றி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீத்தியது.
இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சயீத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் பரோடா அணி - பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு, கேப்டன் கேதார் தேவ்தார் அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பரோடா அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேதார் தேவ்தார் 64 ரன்களை எடுத்தார்.
அதன்பின் வெற்றியை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் பரோடா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடைபெறவுள்ள இறுதி போட்டியில் தமிழ்நாடு - பரோடா அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.
இதையும் படிங்க:இபிஎல்: மான். யுனைடெட்டை பந்தாடிய ஷெஃபீல்ட் யுனைடெட்!