நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் லீக் போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது சூப்பர் லெக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், சூப்பர் லெக் குரூப் பி பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, மனிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக, தினேஷ் கார்த்திக் 43, வாஷிங்டன் சுந்தர் 39 ரன்கள் அடித்தனர். கர்நாடக அணி தரப்பில் ரோனித் மோரே, வி. கெளசிக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, 159 ரன்கள் இலக்குடன் விளையாடிய கர்நாடக அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கே. எல். ராகுல், தேவ்துட் படிகல் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில், தேவ்துட் படிகல் 30 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால், கர்நாடக அணி 16. 2 ஓவர்களில் 161 ரன்களை எடுத்து இப்போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கர்நாடக அணியில் கே. எல். ராகுல் 69 ரன்களுடனும், மனிஷ் பாண்டே 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள சூப்பர் லெக் சுற்றில் தமிழ்நாடு அணி மும்பை அணியை எதிர்கொள்கிறது.