தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சையத் முஷ்டாக் அலி - அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி - தினேஷ் கார்த்திக்

சையத் முஷ்டாக் அலி டி20  தொடரின் சூப்பர் லெக் பிரிவில் தமிழ்நாடு அணி எட்டு விக்கெட்டுகள், வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tamil Nadu
Tamil Nadu

By

Published : Nov 28, 2019, 9:38 AM IST

இந்த ஆண்டுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் சூப்பர் லெக் குரூப் பி பிரிவின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு - ஜார்க்கண்ட் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணிக்கு தமிழ்நாடு பவுலர்களான வாஷிங்டன் சுந்தர், எம். சித்தார்த் இருவரும் அச்சுறுத்தலாக இருந்தனர். இவர்களது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜார்க்கண்ட் அணி 18.1 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் சுவுரப் திவாரி 24, சுமித் குமார் 19, விவேகானந் திவாரி 14 ரன்களை எடுத்தனர். ஏனைய எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

தமிழ்நாடு அணி தரப்பில் எம். சித்தார்த் நான்கு ஓவர்களில் 18 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் நான்கு ஓவர்களில் 10 ரன்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, 86 ரன்கள் இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணி 13.5 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

வாஷிங்டன் சுந்தர் 22 பந்துகளில் மூன்று சிக்சர்களுடன் 38 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 13 ரன்களிலும் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர். இதனால், தமிழ்நாடு அணி இப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு சூப்பர் லெக் குரூப் பி பிரிவில் விளையாடிய நான்குப் போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வி என 12 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நாளை மறுநாள் (நவம்பர் 29) சூரத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணி, ஹரியானாவுடன் மோதுகிறது.

ABOUT THE AUTHOR

...view details