தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிக் பாஷ்: தொடர்ந்து ஐந்தாவது தோல்வி... நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு வந்த சோகம்!

பிக் பாஷ் டி20 தொடரில் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு நேற்றைய லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததன் மூலம் தொடர்ந்து ஐந்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.

melbourne-renegades-
melbourne-renegades-

By

Published : Jan 3, 2020, 8:47 AM IST

நடப்பு சீசனுக்கான பிக் பாஷ் டி20 தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் மோதியது. இதுவரை இந்த சீசனில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி தோல்வியடைந்திருந்து. இதனால், மெல்போர்னில் உள்ள டாக்லாந்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தொடர் தோல்விக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, இப்போட்டியில் டாஸ் வென்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி, டேனியல் கிறிஸ்டியனின் அதிரடியில் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக சாம் ஹார்பர் 45 ரன்கள் அடித்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய டேனியல் கிறிஸ்டியன் 17 பந்துகளில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 32 ரன்கள் விளாசினார். சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் ஜாக்சன் பேர்டு, லாயிட் போப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 155 ரன்கள் இலக்குடன் விளையாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் சிறப்பாக ஆடினாலும், அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி நான்கு பந்துகளில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரிச்சர்ட் க்ளீசன் வீசிய பந்தை ஜோர்டன் சில்க் சிக்சர் அடித்தார். இதனால், 19.5 ஓவர்களிலேயே சிட்னி சிக்சர்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதன்மூலம், சிட்னி சிக்சர்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இம்முறையும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

நடப்பு சீசனில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி சந்திக்கும் ஐந்தாவது தொடர் தோல்வி இதுவாகும். கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற அணி இம்முறை ஒரு வெற்றிபெறவே தடுமாறிவருகிறது. தொடர் தோல்விகளுக்குப் பிறகு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி நாளை மெல்போர்ன்ஸ் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான தனது அடுத்த போட்டியிலாவது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:ரஷித் கானின் பேட்டிங்கைக் கண்டு மிரண்ட பந்துவீச்சாளர்!

ABOUT THE AUTHOR

...view details