கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், ஓராண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரீ - எண்ட்ரி கொடுத்தார். இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவர், 379 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், மூன்று அரைசதம் என மொத்தம் 774 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் எப்படி தர வேண்டும் என்பதை மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் வகையில் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அந்தவகையில், அவர் மூன்றரை வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கவுள்ளார். ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்த்து தலா மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தத் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றுள்ளார். அவர் இறுதியாக, 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில்தான் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்த கம்பேக் போலவே டி20 போட்டியிலும் ஸ்மித் தருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் இரண்டு அரைசதம் உட்பட 431 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கவுள்ளது.