இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில், இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 170 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவ் ஸ்மித் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்ட்ரிகளாக பறக்கவிட்ட ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட்டில் தனது 26ஆவது சதத்தை பதிவு செய்தார்.
பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்மித் மறுமுனையில், அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் டிம் பெய்ன் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஸ்டீவ் ஸ்மித்தை அவுட் செய்ய முடியாமல் இங்கிலாந்து அணி தவித்துவந்தது. ஏனெனில், விக்கெட் என்ற பேச்சுக்கே இடம்கொடுக்காமல் அவர் விளையாடிய ஒவ்வொரு ஷாட்டும் நேர்த்தியாக இருந்தது. தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார்.
இதில், ஆச்சரியம் என்னவென்றால், அவர் அடித்த மூன்று இரட்டை சதங்களும் இங்கிலாந்து அணிக்கு எதிராகதான். இந்த நிலையில், 118ஆவது ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் 211 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், 24 பவுண்ட்ரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். ஸ்மித் அவுட் ஆனதால் ஆஸ்திரேலிய அணி 438 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில், களத்தில் இருந்த மிட்சல் ஸ்டார்க், நாதன் லயான் ஆகியோர் அதிரடியாக ஆடினர்.
குறிப்பாக, மிட்சல் ஸ்டார்க் பிராட் ஓவரில் தொடர்ந்து நான்கு பந்தில் நான்கு பவுண்ட்ரிகளை அடித்தார். யாரும் எதிர்பார்க்காதவாறு பேட்டிங் செய்த அவர், அரைசதம் விளாசினார். ஆஸ்திரேலிய அணி 126 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்தபோது டிக்லர் செய்தது. மிட்சல் ஸ்டார்க் 54 ரன்களுடனும், நாதன் லயான் 26 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பேட்டிங்கில் மாஸ் காட்டிய ஸ்மித் இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் இங்கிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 22 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறிவருகிறது. தொடக்க வீரரான ஜோ டென்லி நான்கு ரன்களில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். ஒட்டுமொத்தத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை தலைநிமிர செய்துள்ளார்.இந்தத் தொடரில் அவர், நான்கு இன்னிங்ஸில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், ஒரு அரைசதம் என மொத்தம் 539 ரன்களை குவித்துள்ளார்.